×

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, டிச.4:  சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் தமிழக முதல்வர் மாவட்ட வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிவகங்கைக்கு தமிழக முதல்வர் இன்று வரும் நிலையில் மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் பயனடைய கொண்டுவரப்பட்ட திட்டமான ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்(காவிரி) திட்டம் விரிவுபடுத்தப்பட வில்லை. சிவகங்கை மாவட்டத்திற்கென தனியாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்டவை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டால் குடிநீர் பற்றாக்குறை போக்கப்படும். மாவட்டத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழில். வைகை பாசனம் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலமும், பெரியாறு பாசன மூலம் 6 ஆயிரம் ஏக்கர் ஒரு போக சாகுபடி நிலமும் பயன்பெறுகிறது. ஆனால் ஆண்டுதோறும் நீரை பெற சாகுபடியின் இறுதி வரை விவசாயிகள் தொடர்ந்து போராட வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை அருகே உள்ள கிராபைட் ஆலையை விரிவுபடுத்தும் பணி, உப தொழில் தொடங்குவது உட்பட எதுவும் செய்யாததால் ஆலை பெயரளவிலேயே இயங்கி வருகிறது.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் மத்திய அரசு சார்பில் ரூ.20கோடி மதிப்பீட்டில் 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க்(தொழில் பூங்கா) கடந்த 7 ஆண்டுகளாக எவ்வித செயல்பாடும் இல்லாமல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, பூலான்குறிச்சி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருபாலரும் படிக்கும் அரசு கலைக்கல்லூரியும், சிவகங்கையில் மகளிர் அரசு கலைக்கல்லூரி என மொத்தம் நான்கு அரசு கலை கல்லூரிகள், மூன்று அரசு உதவிபெறும் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. போதிய கல்லூரிகள் இல்லாததால் ஏராளமான மாணவர்கள் பள்ளிப்படிப்போடு, படிப்பை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கூடுதல் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கையில் அரசு பொறியியல், கல்வியியல், சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ரூ.97 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டு 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போதிய நவீன சிகிச்சை வசதிகள் இல்லாமல் இயங்கி வருகிறது. சிவகங்கை அருகே திருமலையில் சுமார் 200அடி உயர மலையின் மீது 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில், 12ம் நூற்றாண்டு பாகம்பிரியாள், மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில், மூலிகைச் சாயங்களால் வரையப்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் 14ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டுக்கள், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. திருமலை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஆய்வுகள் எதுவும் தொடங்கக்கூட இல்லை.
மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Chief Minister ,
× RELATED எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள்: முதல்வர்,...