×

விடிய,விடிய கொட்டிய மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாயல்குடி, டிச.4:   ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை, புயல் எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ராமேஸ்வரத்தில் 120.20மி.மீ, முதுகுளத்தூரில், 105 மி.மீ, பரமக்குடியில் 31.60 மி.மீ, ராமநாதபுரத்தில் 33.50மி.மீ, கமுதியில் 22.80 மி.மீ, கடலாடியில் 19 மி.மீ, வாலிநோக்கத்தில் 17.60 மி.மீ என நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் 746.30 மி.மீட்டர் மழை பதிவானது. இருந்த போதிலும் தொடர்ச்சியாக மிதமாக மழை பெய்து கொண்டே இருந்தது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலை, சாலைக்கார தெரு, வண்டிக்கார தெரு, அரண்மனை பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகராட்சி பகுதிகள், பட்டிணம்காத்தான், சக்கரக்கோட்டை உள்ளிட்ட ஊரக பகுதிகளின் தெரு, சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. ராமநாதபுரம்-கீழக்கரை வழித்தடத்தில் உள்ள ரயில் பாதைக்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் சேரும், சகதியுமாக கிடப்பதால் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் பாரதி நகர் செல்லும் வழி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் சாலையோரம் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் கடை வீதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு நடந்து செல்லக் கூட முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.

மேலும் தொடர் மழையால் ராமநாதபுரத்திற்கு மண்டபம், ராமேஸ்வரம் செல்லும் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதுபோன்று கிராம பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கிராமமக்கள் நகர பகுதிக்கு வரமுடியாமல், கூடுதல் பணம் செலவழித்து ஷேர் ஆட்டோகளில் வந்து செல்கின்றனர். முதுகுளத்தூர் அருகே வெங்கலகுறிச்சியில் பஞ்சவர்ணம் என்பவரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமானது. பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் சார்பில் நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டது.  மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை புயல் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாயத்துகளில் நூறுநாள் வேலை ரத்து செய்யப்பட்டது.

Tags : Vidya ,
× RELATED நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை