×

அபிராமத்தில் அரசு பள்ளி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை

கமுதி, டிச.4:   கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.
அபிராமம் பேரூராட்சியில், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்ப பள்ளி என தலா 1 உள்ளன. தற்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும்பான்மையான மக்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க ஆசைப்படுகின்றனர்.

இப்பகுதியிலிருந்து மாணவர்கள் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால்  18 கி.மீ தூரத்திலுள்ள பார்த்திபனூரிலும், 12 கி.மீ தூரத்திலுள்ள கமுதிக்கும் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அபிராமம் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய கூலி வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் அரசின் இத்திட்டத்தின் பயன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அபிராமத்தில் புதிதாக அரசு பள்ளி அமைத்து தர வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அருணாச்சலம் கோரிக்கை வைத்து இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளார்.

Tags : Parent Teacher Association ,government school ,
× RELATED பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக...