
பரமக்குடி,டிச.4: பரமக்குடி பகுதியில் புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து, தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
பாம்பன் கடலோர பகுதிகளில் புரெவி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பரமக்குடி,ராமநாதபுரம்,ராமேஸ்வரம், கீழக்கரை, சாயல்குடியில், கடலாடி திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் வைகை கரையோரம் வசிக்கக் கூடிய பொதுமக்கள் தங்க பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா உறுப்புக் கல்லூரி மற்றும் சமுதாய கூடங்கள் என 21 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள மக்களை சந்தித்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிய நிலையில், உணவு, மற்றும் அடிப்படைத் தேவைகள் காலதாமதமின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்னையாபுரம், உரப்புளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்குச் சென்று கலெக்டரிடம் பொதுமக்களிடம் ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்எல்ஏ சதன் பிரபாகர், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரயு ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜகுரு உடனிருந்தனர்.