×

வாடிப்பட்டியில் ரூ.3.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

வாடிப்பட்டி, டிச. 4: சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் கூறுகையில், ‘வாடிப்பட்டி நகர் பகுதியில் இதுவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், எஸ்பி.வேலுமணி உள்ளிட்டோர் ஒத்துழைப்போடு சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய நீதிமன்ற கட்டிடம், கழிவுநீர் வாய்க்கால்கள், ஒட்டான்குளம் சீரமைப்பு பணி, புதிய பத்திரபதிவு அலுவலக கட்டிடம், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் வாடிப்பட்டி பேருந்து நிலையம் சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கட்டு, புதிதாக இரண்டு தளங்களுடன் கூடிய 30 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரையில் நடைபெறும் விழாவில் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்’ என்றார்.

ரூ.40 ஆயிரம் பறிப்பு
சோழவந்தான் அருகே தென்கரை புதூரில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செந்தில் (44). இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒரு கும்பல் ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். செந்தில் தர மறுக்கவே ஆத்திரமடைந்த கும்பல் கடையை சேதப்படுத்தியது. இதை செந்திலின் மருமகனான தனியார் நிறுவன ஊழியர் சரவணன் தட்டி கேட்டுள்ளார். இதனால் சரவணனை தாக்கிய கும்பல் அவரிடமிருந்த ரூ.40,500 பணம், செல்போனை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து புதூர் முத்து வன்னி (30) என்பவரை கைது செய்தனர். தலைமறைவான தனுஷ், ராம்குமார், பாலகார்த்தி, காஞ்சிவனம், ஆகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

போக்சோவில் கைது
மேலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற கருப்பையா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கினார். தொடர்ந்து சிறுமிக்கு கடந்த 28ம்  தேதி மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி அளித்த புகாரில் கொட்டாம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

கருமாத்தூரில் நாளை மின்தடை
செக்கானூரணி துணை மின்நிலையத்தில் நாளை (டிச.5, சனி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்தூர், சாக்கிலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆதிலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Vadippatti ,bus stand ,
× RELATED முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்