டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டம்

திருப்பூர்,டிச.4:டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, துணைத் தலைவர்கள் சஞ்சய், கல்கி, மாவட்ட துணைச் செயலாளர் பாலமுரளி,  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

 பின்னர் ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக சென்று அப்பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகளை தாக்கிய காவல் துறையை கண்டித்தும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய விரோத சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தி கலைய செய்தனர். இதனால் தலைமை தபால் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு:  விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் திருப்பூரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தை அரசியல் கட்சியினர் தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தலைமை தபால் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: வேளாண் திருத்த சட்டங்களை கைவிடக்கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் நேற்று திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். ஏர்முனை இளைஞரணி மாநில தலைவர் வெற்றி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராசு, மாநில அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மத்திய அரசு நிறைவேற்றிய விவசாய விரோத சட்டங்களை கைவிட வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும், மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: