வங்கதேசத்துடன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் அயர்லாந்து 214 ரன்னில் ஆல் அவுட்

மிர்பூர்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு சுருண்டது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஆண்டி பால்பிர்னி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஜேம்ஸ் மெக்கல்லம், மர்ரே காமின்ஸ் களமிறங்கினர். காமின்ஸ் 5, மெக்கல்லம் 15 ரன்னில் வெளியேற, பால்பிர்னி 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஓரளவு தாக்குப்பிடித்த ஹாரி டெக்டர் – கர்டிஸ் கேம்பர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. டெக்டர் 50 ரன் (92 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மிராஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பீட்டர் மூர் 1 ரன், கேம்பர் 34, ஆண்டி மெக்பிரைன் 19 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். உறுதியுடன் போராடிய லோர்கன் டக்கர் 37 ரன், மார்க் அடேர் 32 ரன் விளாசி தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் வெளியேறினர்.

கிரகாம் ஹியூம் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணி 77.2 ஓவரில் 214 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 28 ஓவரில் 10 மெய்டன் உள்பட 58 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். எபாதத் உசேன், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2, ஷோரிபுல் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்துள்ளது. நஜ்முல் ஷான்டோ 0, தமிம் இக்பால் 21 ரன்னில் வெளியேறினர். மோமினுல் ஹக் 12 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post வங்கதேசத்துடன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் அயர்லாந்து 214 ரன்னில் ஆல் அவுட் appeared first on Dinakaran.

Related Stories: