×

மழைப்பொழிவு குறைவாக இருப்பினும் ஊட்டியில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார்

குன்னூர், டிச.4:  நீலகிரியில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் திரும்பிய நீலகிரி இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து  குன்னூர் நகரை சுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி வண்டிச் சோலை, சிம்ஸ்பார்க், எடப்பள்ளி, மவுண்ட் ரோடு, பேருந்து நிலையம் என பல இடங்களில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா விழிப்புணர்வு குறித்து சுவர் ஓவியங்கள் வரைந்தும் அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தன்னார்வல இளைஞர்கள் சார்பில் முக கவசங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சப்.கலெக்டர் ரஜ்ஜித் சிங் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் இணைந்து வழங்கிய குப்பை தொட்டிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து உபதலை பகுதியில் நடைபெற்ற  உலக மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கொரோனா நோய் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள்,  15 பயனாளிகளுக்கு ரூ. 1,27,681 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிண்டர் டிரஸ்ட் சார்பில் தையல் பயிற்சி பெற்ற 15 பேருக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புரெவி புயல் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் இல்லை. எனினும் மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் செய்து வருகிறோம். ஏற்கனவே நிவர் புயலுக்கு எவ்வாறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ அதே நிலை தொடரும். ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குன்னூர் சப்.கலெக்டர் மற்றும் ஆர்டிஓ தலைமையில் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நன்கு பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்பு குழுவினர்  40 பேர் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த பத்து நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.  ஆபத்தான மரங்கள் அதிகம் உள்ள நிலையில், கன மழை மற்றும் பலமான காற்று வீசும் போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags : Ooty State Disaster Rescue Team ,
× RELATED தொடர்ந்து மழை பெய்தும் 95 சதவீத கண்மாய் குளங்களில் தண்ணீர் இல்லை