×

சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி மலை ரயிலை இயக்க வேண்டும்

ஊட்டி,டிச.4:சுற்றுலா பயணிகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாத் தலங்களை மட்டும் கண்டு ரசித்துவிட்டு செல்லாமல், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயிலிலும் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளே இந்த மலை ரயில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, பல லட்சம் செலவு செய்து ரயிலை வாடகைக்கு கூட எடுத்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இந்த மலை ரயிலில் பயணிக்க முடியாத சுற்றுலா பயணிகள் குறைந்த தொலைவான ஊட்டி - குன்னூர் இடையே பயணிக்கின்றனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் தவிர வேறு எந்த ஒரு சுற்றுலா தலங்களும் திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல், மலை ரயிலும் இதுவரை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படாமல் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, ஊட்டியில் சுற்றுலா தொழிலை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை சுற்றுலா பயணிகளுக்காக மலை ரயில் இயக்கப்படவில்லை என்றாலும், ஊட்டி - குன்னூர் இடையே மலை ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு