×

பொள்ளாச்சியில் தொடர் மழை

பொள்ளாச்சி, டிச.4: பொள்ளாச்சி நகர், கிராம பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் இறுதியில்  துவங்கிய தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரை பெய்தது. அதன்பின், அவ்வப்போது வடகிழக்கு பருவமழை சாரலுடன் நின்றுபோனது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வடகிழக்கு பருவமழை மீண்டும் பெய்ய துவங்கியது.  பகல் நேரத்தில் மழை குறைவாக இருந்தாலும், இரவு நேரத்தில் அடிக்கடி மழை பெய்ததால் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்தனர்.

பின்னர், கடந்த சில நாட்களாக  மழை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டும் மழை பெய்ய துவங்கியது. பொள்ளர்சசி  நகர் மட்டுமின்றி, சுற்று வட்டாரத்தில் நெகமம், ஆனைமலை, கோட்டூர், ஆழியார், வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை,  அம்பராம்பாளையம், கோவில்பாளையம், வடக்கிபாளையம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தொடர்ந்து  கனமழையாக பெய்தது. நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகர் மற்றும் கிராமபுற சாலைகளில் மழைநீர் அதிகளவு வழிந்தோடியது. பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைவாக இருந்தாலும், சமவெளி பகுதியில் அடிக்கடி பெய்யும் மழையால் மண்ணின்  ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது தொடர்ந்து பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வால்பாறையில் சாரல் மழை
வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைப்பகுதிகள் அருகே குடியிருப்பவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வால்பாறை தாசில்தார் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,`புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் அனைத்து துறையினரும் தயார்  நிலையில் உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தபட்டுள்ளது’ என்றார்.

Tags : Pollachi ,
× RELATED ராமேஸ்வரத்தில் தொடர் மழை