×

தக்காளி அறுவடை பணி தீவிரம் தொடர்ந்து விலை சரிவு

பொள்ளாச்சி, டிச.4: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு ஜூலை மாதத்திலிருந்து சில மாதமாக அடிக்கடி  பெய்த தென்மேற்கு பருவமழையால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இதில், பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் அதன் அறுவடை பணி கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பிருந்தே துவங்கியது.  இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமானது.

மேலும், கிணத்துக்கடவு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை சரிந்தது. தற்போது வடக்கிபாளையம், சூலக்கல், நடுப்புணி, ஆர்.பொன்னாபுரம், முத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள தக்காளி அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிராமப்புறங்களில் நல்ல விளைச்சல் அடைந்த  தக்காளி அறுவடை பணியில் விவசாய கூலித்தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், செடியில் பாதி பழுத்த நிலையில் உள்ள தக்காளிகளை அறுவடை செய்து டிராக்டர் மற்றும் சரக்கு வாகனங்களில் ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிணத்துக்கடவு மற்றும் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த வியாபாரிகள், தோட்டத்திற்கு சென்று நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...