×

புதிய வாக்காளர்களை சேர்க்க வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி, டிச.4: பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தாசில்தார் தணிகைவேல் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் சரவணன், மாரீஸ்வரன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 269 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த மாதம் 17ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திருத்தம், நீக்கல், புதிய வாக்காளர் சேர்ப்பது என சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்கள் வரும் 12, 13ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கிடையே, வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில், 18 வயது நிறைவடைந்த அனைவரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலின்படி சரிபார்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது, இறந்தவர்களின் பெயர்கள் இருந்தால், அதை உடனே நீக்கம் செய்ய வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : polling officials ,voters ,
× RELATED போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு