நபார்டு வங்கி மூலம் ரூ.13,750 கோடி கடன் வழங்க முடிவு

ஈரோடு,டிச.4:   நபார்டு வங்கி மூலம் ஈரோடு மாவட்டத்தில் வரும் நிதியாண்டில்  ரூ.13,750.58 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் கதிரவன்  தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நபார்டு வங்கியின்  2021-2022ம் நிதியாண்டிற்கான முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கதிரவன் வெளியிட்டு, பின்னர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வளங்களின் அடிப்படையில் 2021-2022ம் நிதியாண்டிற்கு ரூ.13,750.58 கோடி கடன் வழங்க வாய்ப்பு உள்ளதாக, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயத்துறைக்கு மொத்தமாக ரூ.7,692.45 கோடி வழங்கத் திட்டமிடப்பட்டு அதில் பயிர்க்கடனாக ரூ.4,041.80 வழங்கவும், மத்திய காலக்கடனாக விவசாய உள்கட்டமைப்புக்கும்  சேர்த்து ரூ.3,650.65 கோடி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாகனம், ஆடை தயாரிப்பு மற்றும் உணவு பதனிடல் ஆகிய தொழில்துறைகளில் புதிய தொழில்  துவங்கவும் தற்போது செய்து வரும் தொழில்களை விரிவுபடுத்தவும் அதிக  வாயப்புள்ளதால், சிறு குறு தொழில் துறைகளுக்கு ரூ.3,729.82 கோடி கடன் வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்ட அறிக்கை ஈரோடு மாவட்டத்திலுள்ள  வங்கிகளுக்கு முன்னுரிமை கடன்கள், வழங்க வழிகாட்டியாக இருக்கும். வங்கியாளர்கள் சிறு, குறு தொழில்துறைகள், தோட்டக்கலைப் பயிர்களுக்கு மத்திய  கால விவசாயக் கடன்கள், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் நீர் மேலாண்மை  மற்றும் சேமிப்பு சாதனங்கள் அமைத்தல் போன்றவற்றிக்கு அதிகளவில் கடன் வழங்க  வேண்டும். மேலும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க கால்நடை வளர்ப்பு  மற்றும் மீன் வளத்திட்டங்களுக்கு நடைமுறை மூலதனக்கடனாக விவசாயக் கடன்  அட்டைத் திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும். வேளாண் உள்கட்டமைப்பு  நிதியத் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதிலும் வங்கிகள் கவனம் செலுத்த  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  இதைத்தொடர்ந்து, நபார்டு  வங்கியின் உதவி பொது மேலாளர் அபுர்வராஜன் மாவட்டத்தில் விவசாயம் மற்றும்  சிறு குறு தொழில் துறைகளுக்கு கடன் வழங்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கி  பேசினார்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரவிந்தன் வங்கிகள்  சுயஉதவிக் குழுக்களுக்கு இவ்வாண்டுக்கு ரூ.507 கோடியும், பஞ்சாயத்து  அளவிலான கூட்டமைப்புக்கு பெருங்கடனாக ரூ.50 கோடியும் கடன் வழங்க வேண்டும்  எனத் தெரிவித்ததுடன், முத்ரா, பிரதம மந்திரி ஸ்வநிதி, மாவட்ட தொழில் மையம்  மற்றும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிக கடன் வழங்க  வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துறை இணை  இயக்குநர் சின்னச்சாமி, கனரா வங்கி மண்டல மேலாளர் ஜனார்த்தன ராவ், மாவட்ட  தொழில் மைய மாவட்ட மேலாளர் திருமுருகன், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன்,  தாட்கோ மேலாளர் சிந்துஜா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: