பவானிசாகர் பகுதியில் காரில் ஆடு திருடும் கும்பல்: விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம், டிச. 4: சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் பகுதியில் இரவு நேரங்களில் காரில் சென்று ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள இக்கரைதத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை சென்று பார்த்தபோது, பட்டியில் இருந்த 13 செம்மறி ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல் அப்பகுதியிலுள்ள வெள்ளியம்பாளையம் புதூர் காலனியைச் சேர்ந்த ரங்கன் என்பவரது 2 வெள்ளாடுகளும் திருடு போயின. இரவு நேரத்தில் காரில் வந்த ஒரு கும்பல் ஆடுகளை திருடிச் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவப்பு நிற காரில் வந்த கும்பல் ஆடுகளை திருடிக்கொண்டு, கிராமத்து சாலை வழியே கார் செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: