×

விஏஓ அலுவலகத்தை பொக்லைன் இயந்திரத்தால் இடித்து சேதப்படுத்திய 3 பேர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி, டிச. 4:  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சூ.பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக மஞ்சுளாதேவி (39) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் வேலாயுதம் (41) என்பவர் அலுவலகத்துக்கு சென்று வேறு நபரின் பெயரில் உள்ள சிட்டாவை கொடுத்து அடங்கல் கேட்டுள்ளார். சிட்டாதாரரை வரசொல்லுங்கள், அப்போதுதான் தரமுடியும் என கூறி அனுப்பி வைத்துள்ளார். விஏஓ அலுவலக பணி காரணமாக வெளியே சென்றுவிட்டு பின்னர் அலுவலகத்துக்கு வந்த போது யாரோ பொக்லைன் இயந்திரத்தால் விஏஓ அலுவலகத்தை இடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

விசாரணை செய்ததில், சிட்டா அடங்கல் தர மறுக்கப்பட்ட ஆத்திரத்தில் வேலாயுதம் சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவரது பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து அலுவலகத்தை இடித்தது தெரியவந்தது. இதையடுத்து வேலாயுதம், பொக்லைன் இயந்திர டிரைவர் சூ.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சாமுண்டி மகன் இருசன் (30), பொக்லைன் இயந்திர உரிமையாளர் காந்தி (55) ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து வேலாயுதம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags : VAO ,
× RELATED பாடியநல்லூர் விஏஒ அலுவலகத்தில் கிராம...