×

அரசு பஸ்சில் மூதாட்டியிடம் 23 பவுன் நகை திருட்டு மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலை

விழுப்புரம், டிச. 4: விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 23 பவுன் நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம் கலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (62). இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டிசம்பர் 2ம் தேதி 7 மணியளவில் சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு பஸ்சில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சிக்காக அணிந்திருந்த 23 பவுன் நகைகளை ஒரு சிறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அந்த பெட்டியை ஒரு பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.  இந்நிலையில் பஸ், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு சுமார் 10.30 மணியளவில் வந்தடைந்தது. விஜயலட்சுமி பஸ்சிலிருந்து இறங்கும் போது அருகில் சென்னையிலிருந்து உடன் பயணம் செய்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விஜயலட்சுமி நகை வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக பஸ்சிலிருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதனை பார்த்த விஜயலட்சுமி பஸ்சில் பயணித்த சகபயணிகள் உதவியுடன் அப்பெண்ணை மடக்கி பிடித்துள்ளார். அப்போது அப்பெண் தனது பையை
எடுப்பதற்கு பதிலாக மாற்றி எடுத்துவிட்டதாக கூறி பையை விஜயலட்சுமியிடம் ஒப்படைத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டார். இதை நம்பி விஜயலட்சுமி அதே இடத்தில் தனது பையை திறந்து பார்க்காமல் பையை எடுத்துக்கொண்டு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் தனியார் பஸ்சில் சொந்த ஊரான கலந்தல் கிராமத்துக்கு புறப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய விஜயலட்சுமி தன்னுடைய பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதனால் விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். அவரது 23 பவுன் நகையும் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தன்னுடன் பயணித்த பெண்ணே திருடிச் சென்றது பின்னர் தெரியவந்தது.
 பறிபோன நகையின் மதிப்பு ரூ.7.5 லட்சம் ஆகும்.  இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து மூதாட்டியின் நகையை  திருடிச் சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி