×

வாலிபர் சாவில் சந்தேகம் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை

சின்னசேலம், டிச. 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பஸ்நிலையம் அருகில் உள்ள காமராஜ் நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(30). இவருக்கும் மகா என்கிற மகாலட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பாஸ்கருக்கு சூதாடும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும் பாஸ்கர் கடந்த நவம்பர் 19ம்தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சூதாடிவிட்டு இரவு 2 மணிக்கு  வீடு திரும்பி உள்ளார். மறுநாள் தனக்கு காது வலிப்பதாகவும், உடல் வலி இருப்பதாகவும் என்னை இருவர் தாக்கிவிட்டனர் என்றும் மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.

மேலும் கடந்த 23ம்தேதி தலைவாசல் பகுதியில் உறவினர் இறப்பிற்கு பாஸ்கர், மகாலட்சுமி இருவரும் சென்றுள்ளனர். அங்கும் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 25ம்தேதி காலை 7.30 மணியளவில் இறந்துவிட்டார். இதையடுத்து பாஸ்கரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் மகாலட்சுமி தன் கணவர் பாஸ்கர் சாவில் சந்தேகம் உள்ளதாக கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாவில் சந்தேகம் இருப்பதால் நேற்று காலை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவக் குழுவினர் பாஸ்கரின் உடலை தோண்டி மறுபிரேதப் பரிசோதனை செய்தனர்.

Tags :
× RELATED மசினகுடியில் கொடூரமாக தாக்கியதால்...