×

நரிக்குறவ பெண்ணிடம் போலீஸ்காரர் சில்மிஷம்

சங்கரன்கோவில், டிச. 4:
சங்கரன்கோவிலில் நரிக்குறவ பெண்ணிடம் குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் பஸ் நிலையம், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையமும் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நரிக்குறவர்கள் ஊசி, பாசி விற்று வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் மப்டியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், நரிக்குறவ பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தட்டிக் கேட்ட அவரது உறவினரான மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்க முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் போலீஸ்காரரை தட்டிக் கேட்டனர். அவர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அவரை சுற்றி வளைத்து கைகளை பின்புறமாக கட்டினர். பின்னர் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் வேலை பார்த்து வருவதும், பணி முடிந்து சொந்த ஊரான சங்கரன்கோவிலை அடுத்துள்ள கிராமத்துக்கு செல்வதும் தெரிய வந்தது. மேலும் அவர், குடிபோதையில் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை எச்சரித்து பஸ்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை கையும், களவுமாக பிடித்துக் கொடுத்தும் போலீஸ்காரர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி விட்டதாக அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து கலைந்து சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே போலீஸ்காரர், சங்கரன்கோவிலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

Tags : Policeman ,
× RELATED போலீஸ்காரர் பைக் மோதி பனியன் தொழிலாளி பலி