களக்காடு அருகே வீடுகளை இடிக்க எதிர்ப்பு மறியலில் ஈடுபட்ட 45 பேர் மீது வழக்கு

களக்காடு, டிச. 4:  களக்காடு அருகே தம்பிதோப்பில் சேரன்மகாதேவி - பணகுடி சாலையோரம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  கூலி தொழிலாளர்களான இவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு குடியிருந்து வருகின்றனர். மேலும் வீடுகளுக்கு தீர்வை செலுத்தி வருகின்றனர். மின் இணைப்பும் பெற்றுள்ளனர்.இந்நிலையில் இவர்கள் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளதாகவும், தற்போது சாலை விரிவாக்கப்பணி நடைபெற உள்ளதால் வீடுகளை அகற்றும் படியும் நெடுஞ்சாலைதுறை சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வீடுகளை பொதுமக்கள் அகற்றாவிட்டால் ஜே.சி.பி. மூலம் இடிப்போம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைதொடர்ந்து கடந்த 1ம் தேதி வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்க கோரியும் பொதுமக்கள் தம்பிதோப்பு சாலையில் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய திமுக செயலாளர் ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூ ஒன்றிய பொறுப்பாளர் முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரியை இயக்க மாவட்ட தலைவர் சுகுமார், மதிமுக ஒன்றிய செயலாளர் திருநாவுகரசு, உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் சேரன்மகாதேவி-நாகர்கோவில் போக்குவரத்து தடைபட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அரசு அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக ஒன்றிய திமுக செயலாளர் ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூ ஒன்றிய பொறுப்பாளர் முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் சுகுமார், மதிமுக ஒன்றிய செயலாளர் திருநாவுகரசு உள்பட 45 பேர் மீது களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories: