தென்காசியில் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

தென்காசி, டிச. 4: தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புரெவி புயலை எதிர்கொள்வது மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ், கலெக்டர் சமீரன், டிஆர்ஓ கல்பனா, எஸ்பி சுகுணாசிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: புயல், கனமழை, அதி கனமழை, தொடர் மழை எதுவாக இருந்தாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். தென்காசி மாவட்டம் தாழ்வான பகுதி இல்லை. அதேவேளை குளங்கள், ஏரி, கால்வாய் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாம்பனுக்கும், குமரிக்கும் இடையே புயல் கரையை கடக்கிறது. பொதுமக்களுக்கு புயல் குறித்து 100 சதவிகிதம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து தகவல் தெரிவிக்க செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 1077 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம். புரெவி புயலானது தற்போது 20 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வருகிறது என்ற தகவல், வானிலை ஆய்வு மையம் மூலம் கிடைத்துள்ளது.

குற்றாலம் சுற்றுலாத் தலத்தில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். ஏற்கனவே படிப்படியாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இதுகுறித்தும் ஆய்வு மேற்கொண்டு அறிவிப்பார்கள். புயலால் பாதிக்கக்கூடிய பகுதிகள் எவை என்பதை கடந்த 10 ஆண்டுகளில் பெய்த மழை அளவு, பாதிப்புகள் ஆகியவற்றை  அடிப்படையாக வைத்து கணக்கெடுத்துள்ளனர். தென்காசி புதிய மாவட்டத்தில் நீர்நிலைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து வரும் காலங்களில் விரைவாக மேற்கொள்ளப்படும், என்றார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பது குறித்து கேட்டபோது அது குறித்து கவனம் செலுத்தவில்லை. புயலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலளித்தார்.முன்னதாக அமைச்சருக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, முன்னாள் எம்பி பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், தாய்கோ வங்கி துணை தலைவர் சேகர், தென்காசி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

Related Stories: