இடைப்பாடி, ஆக.5: இடைப்பாடி அருகே தார் சாலையில் இரும்பினால் ஆன உழவு சக்கரம் பொருத்திய விவசாய டிராக்டரை ஓட்டிச்சென்று சேதப்படுத்தியவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இடைப்பாடி அருகே இருப்பாளி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(55). இவர், அங்குள்ள மாணிக்கம்பட்டி- கட்டிநாயக்கன்பட்டி சாலையில் காட்டுவளவு பஸ் ஸ்டாப் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு உழவு பணிக்காக இரும்பு சக்கரம் பொருத்திய டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். இதில், சாலை சேதமடைந்தது. இதனை கண்டித்தும், கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், இடைப்பாடி பிடிஓ ஆரோக்கியநாதன் கென்னடி, மண்டல துணை தாசில்தார் கர்ணன், பூலாம்பட்டி எஸ்ஐ மலர்வழி ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
