×

நாகை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை

நாகை,டிச.4: நாகை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் நம்பியார் நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது.தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் நேற்று முன்தினம் இலங்கை முல்லை தீவுக்கு 30 கிலோ மீட்டர் தெற்கே கரை நுழைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மன்னார் குடாவிற்குள் பாம்பன் 110 கிலோ மீட்டர், தொண்டி 90 கிலோ மீட்டர், நாகை 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி நாகை மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி நள்ளிரவு மழை பெய்ய தொடங்கியது. லேசாக தொடங்கிய மழை கன மழையாக மாறி நேற்று (3ம் தேதி) காலை வரை பெய்து கொண்டே இருந்தது. அதன்பின்னர் மாவட்டம் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாகை மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்த காரணத்தால் நாகை நம்பியார் நகரில் தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து பெய்யும் மழை விட்ட பின்னரே மழை நீரை வெளியேற்ற முடியும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ள குளம் நிரம்பியதால் குளத்தில் இருந்து நீர் வெளியேறி சாலையில் வெள்ளம்போல் ஓடியது.தொடர் மழையின் காரணமாக நாகை நகர பகுதியில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. கடல் சீற்றம் காணப்படுவதால் நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 3வது நாளாக உள்ளது. அதே போல் கடந்த 23ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500 விசைப்படகுகள், 4 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை நம்பியார் நகர் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த பைபர் படகு தொடர் மழையின் காரணமாக மூழ்கியது. வேளாண் துறை சார்பில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Vidya ,district ,Nagai ,
× RELATED நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை