×

923 கனஅடி தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 923 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு அணை உள்ளன. இந்த அணைகள் மூலம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் மூலம், வருடத்திற்கு 2 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த அணையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதல், ஏப்ரல் 26ம் தேதி வரை இரண்டாம் போகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வருகிற ஜூலை முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனிடையே, ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் ₹26 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இப்பணிகளை மேற்கொள்வதற்காக, அணையில் 41 உயரத்திற்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை, 23 அடியாக குறைக்கும் விதமாக, அணையில் இருந்து உபரி நீரை திறக்கும் பணியை, கலெக்டர் சரயு துவக்கி வைத்தார். தற்போது, அணையில் இருந்து விநாடிக்கு 690 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் சேர்த்து, மொத்தமாக 736 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முதல்போக பாசனத்திற்கு போதிய தண்ணீரை இருப்பு வைத்து, எஞ்சிய உபரி நீரை, அணையில் இருந்து திறந்து விட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 923 கன அடி தண்ணீர் சிறு மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான 52 அடியில், 50.35 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு அதிகரித்தால், கிருஷ்ணகிரி அணையில் இருந்தும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post 923 கனஅடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri dam ,Dinakaran ,
× RELATED மாவட்ட திமுக வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்