×

8 ஆண்டுகளுக்கு பிறகு நிரப்பப்படுவதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு

*தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி: தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை கூடுதலாக 2 ஆண்டுகள் தளர்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மூலம் காரைக்காலில் 124, மாகேவில் 21 என மொத்தம் 145 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கு கல்வி தகுதியாக 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் பொது பிரிவினர் 60 சதவீதமும், ஓபிசி, எம்பிசி, இபிசி, பிசிஎம் பிரிவினர் 55 சதவீதமும் எஸ்சி, எஸ்டி, பிடி, மாற்றுத்திறனாளிகள் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்று தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 21ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் 2015ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இக்காலக்கட்டங்களில் ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ முடித்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு குறிப்பிட்டுள்ள வயது வரம்பை கடந்துவிட்டனர்.

இதனால் தகுதி இருந்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பணியை எதிர்பார்த்து காந்திருந்த அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, அவர்களும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் வகையில் கூடுதலாக 2 ஆண்டுகள் தளர்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர், கல்வி அமைச்சரை சந்தித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கொரோனாவை காரணம் காட்டி அரசு துறைகளில் நிரப்பப்படும் அனைத்து காலி பணியிடங்களுக்கும் 2 ஆண்டுகள் வயது தளர்வு அளிப்பதாக முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோர் சட்டசபையில் அறிவித்திருந்தனர். அதை உறுதிபடுத்தும் வகையில் நடந்து முடிந்த யுடிசி பணி தேர்வு முறையில் கூடுதலாக 2 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டது.

ஆனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது தளர்வு அளிக்காதது எங்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமன அறிவிப்பு ஆணையை மறுபரிசீலனை செய்து வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 8 ஆண்டுகளுக்கு பிறகு நிரப்பப்படுவதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...