×

8 மணி நேர வேலை, ஓய்வூதியம் வழங்கக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் தொடக்கம்

*தபால் பட்டுவாடா முடங்கியது

நாகர்கோவில் : கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 8 மணி நேர வேலை, ஓய்வூதியம் வழங்க கோரி நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அஞ்சலகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களும் வழங்கிட வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமிய அஞ்சலகங்கள் மூடப்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சலக ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார்.

செயலாளர் தினேஷ் பால்மணி, பொருளாளர் தெய்வ செல்வன், முன்னாள் மாநில செயலாளர் இஸ்மாயில், முன்னாள் தலைவர் சுகுமாரன், மகளிர் குழு நிர்வாகிகள் தேவி சங்கரி, ஹரிப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் 188 கிராமிய அஞ்சலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 280 மகளிர் உட்பட 450 பேர் பணியாற்றுகின்றனர். இதில் காலி பணியிடங்கள் உள்ள இடங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மொத்தம் 5 முதல் 10 சதவீதம் உள்ளனர். அவர்கள் சில அலுவலகங்களில் பணியாற்றினர். நேற்று 120 மகளிர் உட்பட 204 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதன் காரணமாக மணியார்டர் பட்டுவாடா, தபால் பட்டுவாடா, இன்சூரன்ஸ் உள்ளிட்ட கிராமிய அஞ்சலக சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

ஒன்றிய அரசு ஏமாற்றி விட்டது

ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,‘கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்த அறிக்கையை அமல்படுத்துவதாக பிரதமர் அறிவித்த உறுதிமொழியை ஏற்று 2018ம் ஆண்டு நடந்த 16 நாள் வேலை நிறுத்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் ஒரு சில பரிந்துரைகளை மட்டும் அமல்படுத்திய ஒன்றிய அரசும், அஞ்சல் இலாகாவும் எங்களை முழுமையாக ஏமாற்றி விட்டது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும், பலமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இலாகாவின் வருமானத்தின் பெரும் பகுதியை கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கடும் உழைப்பு மூலமாக பெற்று வருகின்ற அஞ்சல் இலாகா ஊழியர்களின் அடிப்படை சேவைகளை நிறைவேற்றுவதிலும், பணிக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதிலும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது.ஊழியர்கள் தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்தும் அலைபேசி கருவிகளை இலாகா பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறைகளை ஜிடிஎஸ் ஊழியர் மீது செயல்படுத்திடும் கொடுமையை எந்த இலாகாவிலும் பார்க்க முடியாது’ என்றனர்.

The post 8 மணி நேர வேலை, ஓய்வூதியம் வழங்கக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?