×

772 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்

நாமக்கல், ஆக.25: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 772 அரசு தொடக்கப்பள்ளிகளில் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்தாண்டு செப்டம்பரில் முதற்கட்டமாக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம், முதற்கட்டமாக 70 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 5,505 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். 2023-2024ம் ஆண்டுக்கான மாநில சட்டமன்ற பட்ஜெட் அறிவிப்பில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 1 முதல் 5 வரை அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 772 அரசு தொடக்கப்பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று (25ம்தேதி) முதல் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் செயல்படும் 673 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 27,128 மாணவ, மாணவிகளும், 19 பேரூராட்சி, 3 நகராட்சிகளில் உள்ள 99 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 8,416 மாணவ, மாணவிகள் என மொத்தம் 35,544 மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்டத்தில் உள்ள 842 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 41,060 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஊராட்சி, பேரூராட்சி தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், மேலாண்மை குழு பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக பிரதிநிதி ஆகியோரை கொண்டு முதன்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் மற்றும் பேரூராட்சிகளில் முதன்மைக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளை சார்ந்த உறுப்பினர்களின் சேவைகளை பயன்படுத்தி, தற்போதுள்ள மதிய உணவு திட்ட சமையல் கூடங்களில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த மையப்பொறுப்பாளர்கள், பள்ளி சமையலறை மையங்களை நிர்வகிப்பதுடன் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற பணியிலும் ஈடுபடுவார்கள்.

இத்திட்டத்திற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு வகைகளை தயாரிப்பதற்கு, தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சமையற்கலை திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், 13 வகை உணவுகள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காலை உணவு தயாரிக்க தேவையான அரிசி, உப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கோதுமை ரவா, ரவா, சேமியா போன்ற பொருட்களை கூட்டுறவு சங்கம் மூலமும், இத்திட்டத்திற்காக வழங்கப்படுகிறது.

The post 772 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து...