×

பொதுச்செயலாளர் அங்கீகாரத்திற்கு எதிரான மனு எடப்பாடி பழனிசாமிக்கு 6 வாரம் கெடு: டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக கட்சி ஆகியோர் ஆறு வாரத்தில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிகப்படியான பெரும்பான்மை இருப்பதை அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்படுவதாக கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தெரிவித்திருந்ததில்,‘‘எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. ஏனெனில் 26.04.2022ல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. அதேபோன்று கட்சி விதிகளில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடலாம் என்ற விதியை மாற்றி பத்து ஆண்டுகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் தலைமைக்கழக பணிகளில் இருக்க வேண்டும். பத்து மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். பத்து மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும்.

ஒரு மாவட்ட செயலாளர் ஒருவருக்கு தான் முன்மொழியலாம் அல்லது வழி மொழியலாம் என மாற்றி, அதிமுக கட்சியில் 76 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் புதிய விதிகள் படி மூன்று நபர்கள் தான் போட்டியிட முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். இது அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானதாகும். எனவே எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் 20.04.2023 தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்புகள் வரும் வரை 05.12.2016 அன்று தேர்தல் ஆணையம் வசம் இருந்த அதிமுக கட்சி விதிகளில் எவ்வித மாற்றங்களையும் செய்யக் கூடாது.

அதேப்போன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், பொதுச்செயலாளர் தேர்வையும் அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில்,‘‘அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இதே விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொடுத்த மனுவிற்கு தற்போது வரையில் பதிலளிக்காத தலைமை தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி மனுவை மட்டும் விரைந்து பரிசீலித்து அவரை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.

அதனை எப்படி ஏற்க முடியும். அதனால் இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது, அக்கட்சியில் உள்ள சட்ட விதிகளை மாற்றியமைத்ததை ஒப்புக்கொண்டது ஆகியவை குறித்து எதிர்மனுதாரர்களான இந்திய தலைமை தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக கட்சி ஆகியோர் ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

The post பொதுச்செயலாளர் அங்கீகாரத்திற்கு எதிரான மனு எடப்பாடி பழனிசாமிக்கு 6 வாரம் கெடு: டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,General Secretary ,Delhi High Court ,New Delhi ,Election Commission ,AIADMK ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...