×

அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ் உதவியாளர் மற்றும் பலருக்கு 182 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக விற்ற விஏஓ உள்பட 5 பேர் கைது: சிபிசிஐடி நள்ளிரவில் அதிரடி

தேனி: தேனியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை, மோசடியாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்த வழக்கில், விஏஓ உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள வடவீரநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, தாமரைக்குளம் ஆகிய வருவாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலத்தை, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளராக இருந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ் உட்பட பலருக்கு, அப்போதைய அதிகாரிகள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்தனர். இதுதொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், விஏஓக்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.

அதன்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் ஏற்கனவே அன்னப்பிரகாஷ், தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, உதவியாளர் அழகர்சாமி, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில், ஜாமீனில் வெளியே வந்த அன்னப்பிரகாஷ் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். நிலமோசடி வழக்கில் தொடர்புடைய வடவீரநாயக்கன்பட்டி விஏஓ சுரேஷ்குமார், வடபுதுப்பட்டியை சேர்ந்த சுரேஷ், பாலு, முத்து, ரமேஷ் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் மாலை பிடித்து தேனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்தது குறித்தும், இதில் யார், யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்தும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து விஏஓ உள்ளிட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். முறைகேடாக பட்டா மாறுதல் செய்ததை ரத்து செய்து அரசு நிலமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2.15 ஏக்கர் நிலத்தை சுற்றி வேலி அமைக்க கடந்த மாதம் 28ம் தேதி பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரீப் ஆகியோர் சென்றனர். அந்த இடத்தை வாங்கிய சிலர் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதற்கு பின்புலமாக மோசடியாக விற்பனை செய்த சிலர் இருந்ததாக போலீசார் சந்தேகித்தனர். இதன்படி, நேற்று சிபிசிஐடி போலீசார், அரசு நிலத்தை வேலி போட சென்றபோது தனியாரை தூண்டிவிட்ட சிலரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஓரிரு மாதங்களில் முழுமையாக முடிவடைந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் தம்பிக்காக கிராவல் மண் கடத்தலா?
அரசு நிலம் 182 ஏக்கர் மோசடியாக பட்டா மாறுதல் செய்தது சம்பந்தமாக ஏற்கனவே, தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் முறைகேடாக பட்டா மாறுதல் செய்த நிலத்தில் இருந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன்படி, கடத்தப்பட்ட கிராவல் மண் தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குநராக இருந்த அதிகாரி உள்ளிட்டவர்களையும் சிபிசிஐடி போலீசார் வழக்கில் இணைத்து விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜாவுக்காக, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான அன்னப்பிரகாஷ் கிராவல் மண் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி வழக்கு முடிவடையும் நிலையில், விரைவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையும் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ் உதவியாளர் மற்றும் பலருக்கு 182 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக விற்ற விஏஓ உள்பட 5 பேர் கைது: சிபிசிஐடி நள்ளிரவில் அதிரடி appeared first on Dinakaran.

Tags : VAO ,OPS ,AIADMK ,CBCID ,Theni ,
× RELATED ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து வீஏஓ...