×

சென்னையில் கடந்த 7 நாட்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 16.06.2023 முதல் 22.06.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது. 54 கிலோ கஞ்சா, 100 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 3 செல்போன்கள், பணம் ரூ.1,000/-, 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (17.06.2023) அதிகாலை, விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே ஆட்டோவில் வந்த 3 நபர்களை விசாரணை செய்ய சென்றபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து எடுத்து வந்த 1.ராகுல், வ/22, த/பெ.ஆனந்தன், மேல்நடுவங்கரை, அண்ணா நகர், சென்னை, 2.பிரசாந்த், வ/25, த/பெ.பாபு, செல்வ விநாயகர் கோயில் தெரு, லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி, 3.ஹேமானந்த் (எ) பிரவீன், வ/26, த/பெ.பிரகாஷ், 9வது குறுக்கு தெரு, வசந்தபுரம், குறிஞ்சி நகர், வானூர் தாலுக்கா, பாண்டிச்சேரி ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அதே நாளில் (17.06.2023) அன்று வேளச்சேரி, ஜெகநாதபுரம் 2வது குறுக்கு தெருவிலுள்ள காலி மைதானத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 1.ஜெகதீசன், வ/21, த/பெ.ரகுநாதன், திரௌபதி அம்மன் கோயில் 5வது தெரு, வேளச்சேரி, சென்னை, 2.விஜய்குமார், வ/19, த/பெ.ஆரோக்கியராஜ், ஜெகநாதபுரம் 1வது மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா, 100 (TYDOL) உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாதவரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW/ Madhavaram) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 19.06.2023 அன்று காலை, மாதவரம், ஆந்திரா பேருந்து முனையம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சபீர் அலி, வ/25, த/பெ.ஜாகிர்ஷேக், போஜ்பூர், பர்தாமான், மேற்கு வங்காளம் மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருவல்லிகேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Triplecane) தலைமையிலான காவல் குழுவினர் 21.06.2023 அன்று பெரியமேடு, மூர் மார்க்கெட் அருகில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நரேஷ் நாயக், வ/32, த/பெ.கௌதம்நாயக், சந்ரகிரி, ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Anna nagar) தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (22.06.2023), நொளம்பூர், சர்வீஸ் சாலை, பாலாஜி மருத்துவமனை அருகில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ராகுல், வ/24, த/பெ. ஆனந்தன், காமராஜர் தெரு, லஷ்மி நகர், மதுரவாயல் ஏரிக்கரை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5.15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 821 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சென்னையில் கடந்த 7 நாட்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai City ,
× RELATED சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க...