×
Saravana Stores

50 கால்நடை மருந்தகங்களுக்கு ரூ.20 கோடியில் எக்ஸ்-ரே கதிர்வீச்சு கருவிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: கால்நடைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக, துறை சார்ந்த பண்ணைகளில் உயர் மரபுத் திறன் கொண்ட புதிய கால்நடைகளை அறிமுகம் செய்யும் வகையில் 2490 கால் நடைகள் ரூ.2.61 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும். மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் ரூ.4.90 கோடி செலவில் 50 சதவீத மானியத்தில் 3000 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய ரூ.2.33 கோடி நிதி ஒதுக்கப்படும். இதனால் 25 ஏக்கரில் இருந்து சுமார் 3500 மெட்ரிக் டன் பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும். ஊராட்சி ஒன்றிய கால்நடை மருத்துவ நிலையங்களில் நோய் கண்டறியும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.20 கோடி செலவில் 50 ஊராட்சி ஒன்றிய தலைமை இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு கையடக்க நுண்ணலை நுண்ணாய்வு மற்றும் எக்ஸ்-ரே கதிர்வீச்சு கருவிகள் வழங்கப்படும்.

அனைத்து கால்நடைகளுக்கும் நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் மூலம் கிராமங்கள் தோறும் கால்நடைகளை காக்க உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 73,500 முகாம்கள் நடத்தப்படும். பால் உற்பத்தியை பெருக்குவதற்காக பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகளை பயன்படுத்தி அதிக கிடேரிக் கன்றுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். 5 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 20 கால்நடை மருந்தகங்களுக்கு ரூ.16.30 கோடி செலவில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். துறை சார்ந்த 4 பண்ணைகளில் புதிதாக விவசாயிகள் தகவல் மையம் மற்றும் மாதிரி செயல் விளக்க ஒருங்கிணைந்த பண்ணை கண்காணிப்பு அலுவலகங்கள் ரூ.14 கோடி செலவில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 50 கால்நடை மருந்தகங்களுக்கு ரூ.20 கோடியில் எக்ஸ்-ரே கதிர்வீச்சு கருவிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anita Radhakrishnan ,Chennai ,Tamil Nadu Law Conference ,Livestock ,Care ,Dairying ,Aquarium and Fishermen ,Welfare Department ,Dinakaran ,
× RELATED கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும்...