×

50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய பஸ் நிலையம் அடுத்த மாதம் திறப்பு

*எஞ்சிய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

*450 பைக், 30 ஆட்டோக்களுக்கு பார்க்கிங் வசதி

புதுச்சேரி : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29 கோடியில் வணிக வளாகத்துடன் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமை பெறாத நிலையில் பொதுமக்கள் நலன் கருதி அக்டோபரில் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ் காந்தி அரசு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29 கோடியில் வணிக வளாகத்துடன் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக, பேருந்து நிலைய மைய பகுதியில் இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்றது. இதற்கிடையே மேம்பாட்டு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேருந்து நிலைய பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பேருந்து நிலையத்தை முழுமையாக காலி செய்து கொடுத்தால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க முடியும் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானவுடன் மீண்டும் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்துவிட்டு, புதிய பேருந்து நிலையத்தை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, விரைவாக பணிகளை முடித்து அக்டோபரில் புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனிடையே புதுச்சேரி நகராட்சி அறிவித்தபடி, ஜூன் 16ம்தேதி முதல் ஏஎப்டி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததாலும், அவ்வப்போது பெய்யும் மழையாலும் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் எப்போது புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று பேருந்து ஓட்டுநர்களும், பொதுமக்களும் மிகுந்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அரசு அறிவித்தப்படி, புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தில் மைய பகுதியில் வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு, அவற்றுக்கு ஷெட்டர் போடப்பட்டு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

முன்பு பேருந்து நிலையத்தில் 32 பேருந்துகள் நிறுத்துவதற்கு இடவசதி இருந்தது. தற்போது 46 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பயணிகள் சிரமமின்றி பேருந்துகளில் ஏறி செல்லும் வகையில் சென்னை, விழுப்புரம், காரைக்கால், கடலூர், திண்டிவனம் மற்றும் நகர பேருந்துகள் நிற்கும் இடங்களில் தனித்தனியாக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படவுள்ளது.

பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் 26 கார், 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பெரிய அளவில் பார்க்சிங் வசதியும் அமைக்கப்படுகிறது. இதுதவிர, 30 ஆட்டோ, டெம்போ, டேக்சிகளை நிறுத்துவதற்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையத்திற்கு பஸ்கள் வருவதற்கும், செல்வதற்கும் என இரண்டு வழிகளும், பொதுமக்கள் வருவதற்கு மைய பகுதியில் தனியாக ஒரு வழி என 3 வழிகள் அமைக்கப்படுகிறது.

தற்போது 50 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி அக்டோபரில் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பணிகள் முழுமை பெறாமலேயே பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டு, எஞ்சிய பணிகளை படிப்படியாக செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பேருந்துகள் நிற்பதற்கும், கடைகள் திறப்பதற்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி மற்றும் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அக்டோபரில் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக கோப்பு அனுப்பப்பட்டு, அரசு முடிவு செய்யும் தேதியில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.

வணிக வளாக கட்டிடத்தில் இடம்பெறும் வசதிகள் என்ன?

புதிய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடத்தில் 31 கடைகள், உணவகம், டிக்கெட் புக்கிங் அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், விசாரணை அலுவலகம், சிசிடிவி கண்காணிப்பு அறை, டைமிங் அலுவலகம், நிர்வாக அலுவலகம், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, 3 காத்திருப்பு அறை, ஒரு ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை, மின்சார அறை, காப்பக அறை, பிரார்த்தனை அறை, ஏடிஎம் வசதி, 3 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவை அமையவுள்ளன.

குறிப்பாக, 4,700 சதுர அடியில் 31 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த 16 ேபருக்கு முதலில் கடைகள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 15 கடைகள் நகராட்சி மூலம் புதிய நபர்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தரை தளத்துடன் அமைந்துள்ள வணிக வளாக கட்டிடம் மட்டும் பயன்பாட்டுக்கு வருகிறது. எதிர்கால தேவைக்கேற்ப பல்வேறு அம்சங்களுடன் வணிக வளாக கட்டிடத்தில் முதல் தளம், 2வது தளம் மற்றும் 3வது தளம் கட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது.

The post 50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய பஸ் நிலையம் அடுத்த மாதம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Smart City ,Dinakaran ,
× RELATED குளித்தலை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம்