×

3 நாள் சிறப்பு முகாம் துவங்கியது

சேலம், ஆக.19: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக 3 நாட்கள் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. இதில், விடுபட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது. மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ₹1000 வழங்கும் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. இதில், மாநிலம் முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள், 18ம் தேதி (நேற்று) முதல் 20ம் தேதி வரை 3 நாட்களுக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று, 3 நாள் சிறப்பு முகாம் துவங்கியது. இதில், ரேஷன்கடைகளுக்கு சென்று விண்ணப்பப்படிவத்தை பெற்று, முகாம்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் குடும்பத்தலைவிகள் சமர்பித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடந்த முகாம்களில் 7,13,66 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.

நேற்று 1,541 மையங்களில் 3 நாள் சிறப்பு முகாம் துவங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கிய இம்முகாமில் விடுபட்டவர்கள் வந்திருந்து, விண்ணப்பங்களை வழங்கி பதிவு செய்துகொண்டனர். குறிப்பாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வராதவர்களும், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்தனர். நேற்றைய தினம் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர். இன்றும், நாளையும் விடுபட்டவர்கள் முழுமையாக வந்து விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 3 நாள் சிறப்பு முகாம் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ₹4.80 கோடி நிதி