புதுடெல்லி: நடந்து முடிந்த 2 கட்ட தேர்தல்களில் நாடு முழுவதும் 8 சதவீத பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பெண்கள் போட்டியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக அரசியலிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பண்டை காலங்களில் பெண்கள் அடிமைப்பட்டு கிடந்தனர் என்று சொல்லப்பட்டாலும், குறிப்பிடத்தக்க அளவில் பல துறைகளில் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர்.
இந்நிலையில் 18வது மக்களவைக்கு முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுவை உள்பட 21 மாநிலங்களின் 102 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதியும், 2ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களின் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 8 சதவீத பெண் வேட்பாளர்களே போட்டியிட்டதாக தகவல் வௌியாகி உள்ளது. இது நாட்டில் தற்போதும் பாலின பாகுபாடு நிலவுவதை காட்டுவதாக சமூக ஆர்வலர்களும், அரசியல் ஆய்வாளர்களும் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த 2 கட்ட தேர்தல்களில் மொத்தம் 2,823 பேர் போட்டியிட்டனர். அதில் முதற்கட்ட தேர்தலில் 135 பெண், 2வது கட்டத்தில் 100 பெண் என 235 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதன்படி முதற்கட்டத்தில் போட்டியிட்ட 135 பேரில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 76 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். இவர்கள் மொத்த வேட்பாளர்களில் 8 சதவீதம் மட்டுமே. 2வது கட்டத்தில் கேரளாவில் அதிகபட்சமாக 24 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் இரண்டு கட்டங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களாக இதுவரை 44 பெண்களும், பாஜ வேட்பாளர்களாக 69 பெண்களும் களம் கண்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டில் தற்போதும் பாலின பாகுபாடு நிலவுவதை வௌிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்களும், அரசியல் ஆய்வாளர்களும் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி பல்கலை கழகத்தின் இயேசு மேரி கல்லூரி இணைபேராசிரியை டாக்டர் சுசீலா ராமசாமி கூறியதாவது, “அரசியல் கட்சிகள் இன்னும் அதிக செயல் திறனுடன் அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும். பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதை ஊக்குவிக்க அரசியல் கட்சிகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
அலிகார் முஸ்லிம் பல்கலை கழக இணை பேராசிரியர் டாக்டர் இப்தேகார் அகமது அன்சாரி கூறும்போது, “இந்தியாவின் வாக்காளர்களில் பாதி பேர் பெண்களாக இருப்பதால் வேட்பாளர்கள் குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். அரசியலில் பெண்களின் முழு பங்களிப்பை தடுக்கும் தடைகள் குறித்து ஆராய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அலிகார் முஸ்லிம் பல்கலை கழக பேராசிரியர் முகமது அப்தாப் ஆலம்“மகளிருக்கு இடஒதுக்கீடு தருவது மட்டும் போதாது. அவர்கள் தலைவர்களாகவும், முடிவெடுப்பவர்களாகவும் பார்க்கப்படும் கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
The post 2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி appeared first on Dinakaran.