×

காஞ்சிபுரத்தில் 2 சிறுமிகள் மீட்பு: சிசிடிவி பதிவுகளின் மூலம் தாயை தேடும் பணி தீவிரம்

சென்னை: காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு 2 சிறுமிகள் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து புகார் ஏதும் வராத நிலையில் துப்பு கிடைக்காமல் திணறி வரும் போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாயை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரத்தின் முக்கிய வணிகப் பகுதியான ரயில்வே ரோடு, அதிக பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் 2 மற்றும் 4 வயதுடைய 2 பெண்குழந்தைகளுடன் ரயில்வே சாலை, பகதூர்கான்பேட்டை தெருவழியாக நடந்து சென்றார்.

திடீரென அந்த இளம்பெண் 2 குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டு மாயமானார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகள் இருவரும் தவித்தனர். சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் அழத் தொடங்கினர். இதனைகண்டு சந்தேகமடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விசாரித்தபோது, தங்களது தாய் தண்ணீர் எடுத்து வருவதாக கூறி சென்று உள்ளார் என்று தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் குழந்தைகளுடன் வந்த தாய் அவர்களை தவிக்க விட்டு மாயமானது தெரியவந்தது.

எனவே அப்பகுதி மக்கள், இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 சிறுமிகளையும் மீட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களது பெயர் தீக்ஷிகா (4), ஏரிகா (2) என்றும் தாய் ரம்யா, தந்தை சதீஷ் எனவும் தெரிவித்தனர். மேலும் தங்களது தாத்தா ஆறுமுகம், பாட்டி அமுதா எனவும், அவர்கள் வேலூரில் வசிப்பதாகவும் தெரிவித்தனர். தாய் ரம்யாவுடன் வந்தபோது தண்ணீர் வாங்கிவருவதாக கூறி சென்றதாக சிறுமிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் மீட்கப்பட்ட 2 சிறுமிகள் குறித்து வேலூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வேலூரில் சிறுமிகள் மற்றும் தாய் மாயமானது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்பது தெரிந்தது. மேலும் சிறுமிகள் விவரங்களை மாறி, மாறி தெரிவித்ததால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் சிறுமிகளை அழைத்து வந்தது அவர்களது தாயா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் மாயமான இளம்பெண் 2 குழந்தைகளுடன் வருவது பதிவாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி விசாரித்து வருகிறார்கள். இதுவரை மீட்கப்பட்ட சிறுமிகள் யார்? அவர்களது பெற்றோர் யார்? சிறுமிகளுடன் வந்த இளம்பெண் யார்? என்பது குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து சிறுமிகள் 2 பேரும் சென்னை பரங்கிமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மீட்கப்பட்ட சிறுமிகள் 2 பேரும் நலமாக உள்ளனர். அவர்கள் தங்களது தாயுடன் வந்ததாகவும், சொந்த ஊர் வேலூர் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் வேலூரில் சிறுமிகள் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. மேலும் சிறுமிகளை தாய் தவிக்க விட்டு சென்றது ஏன்? என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிகளுடன் வந்த இளம்பெண் அவர்களது தாயா? அல்லது வேறு யாராவதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். சிசிடிவி காட்சியை வைத்து அந்த இளம்பெண்ணை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் போலீசார் இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களும் தகவல் தெரிவித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்றார்.

The post காஞ்சிபுரத்தில் 2 சிறுமிகள் மீட்பு: சிசிடிவி பதிவுகளின் மூலம் தாயை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,CHENNAI ,Kanchipuram ,
× RELATED விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது...