×

சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் முதன்முதலில் விளையாட்டு துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 1999 டிசம்பர் 9ம் தேதி ஏற்படுத்தியும், விளையாட்டு துறையை ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் தனித்துறையாக 2000 ஜூன் திங்களில் ஏற்படுத்தியும் கலைஞர் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார். தொடர்ந்து, 2021ல் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை ஒவ்வொரு விளையாட்டுக்கும் தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். முதல்வர் முதல்கட்டமாக சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டு ஒன்றிய அரசின் ஒப்புதலோடு பிரதமர் மோடியை அழைத்து 2022ம் ஆண்டில் 44வது செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு உலக அளவில் பாராட்டு பெற்றது. விளையாட்டுத் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் உழைப்பால் அண்மையில், கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு பதக்கப்பட்டியலில் 2ம் இடம் பெற்று, மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இவற்றுக்கெல்லாம் இந்த அரசும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டுக் கலை வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கமும் ஒத்துழைப்புமே காரணம். 2023-24ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சென்னையில் உள்ள 5 முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகரில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்த மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11 கோடியே 34லட்சம் மதிப்பீட்டிலும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் ரூ.5 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டிலும், ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலும், வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் ரூ.4 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டிலும், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சம் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் ரூ.25 கோடி நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விளையாட்டுத்துறையின் தலைமையகமாக தமிழ்நாட்டை உருவாக்க முனைந்திடும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உயர்ந்த நோக்கத்திற்கு ஒரு சீரிய சான்றாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai city ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்...