×

25 சீட் கொடுத்தால்தான் தலைமை இல்லாத அதிமுகவுடன் கூட்டணி

* பாஜ பொருளாளர் டிவிட்டால் மீண்டும் வெடித்தது மோதல்
* எதிர்வினையாற்ற தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை: 25 சீட் கொடுத்தால் மட்டுமே தலைமை இல்லாத அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும் என்று பாஜ பொருளாளர் போட்ட பதிவால் அதிமுக- பாஜ இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. அதிமுக, பாஜ கட்சிகளை சேர்ந்தவர்கள் மாறி மாறி விமர்சித்து வந்தனர். மோதல் போக்கும் அதிகரித்து வந்தது. இந்நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். நிருபர்களை சந்தித்த எடப்பாடி, ‘அதிமுக – பாஜ கூட்டணி தொடரும். அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை’ என்றார். இதனால் இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ‘அதிமுகவுக்கு வசீகரமும் சரியான தலைமையும் தற்போது இல்லை’ என தமிழ்நாடு பாஜ பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்திருப்பது மீண்டும் இரு கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘மத்தியில் 400 சீட்டுகளுக்கு மேல் பெற்று 3வது முறையாக வெற்றி பெறுவார் மோடி. இந்நிலையில் ஆறாக உடைந்து கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அதிமுக வுடன் 25 சீட் கொடுத்தாலே கூட்டணி. இல்லையேல் பாஜ தலைமையில் தனி கூட்டணி. மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழகத்தில் எந்த முடிவையும் மலையே எடுப்பார். அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு உணர்த்திய அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா’’ என்று கூறியுள்ளார். இவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “அதிமுகவுக்கு எதிராக பாஜ வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம்.

அதிமுகவை விமர்சித்து பேசிய எஸ்.ஆர்.சேகரை அண்ணாமலை கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்கவில்லை என்றால் அதிமுக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். ஒரு கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் அமித்ஷாவை நாங்கள் சென்று பார்த்தோம். அதன்பிறகு இந்த மாதிரியான விமர்சனங்களை எப்படி அனுமதிக்க முடியும். இதற்கு அண்ணாமலை தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என காட்டமாக விமர்சித்துள்ளார். அமித்ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பஞ்சாயத்து முடிந்தது என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் மோதல் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக- பாஜ உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

The post 25 சீட் கொடுத்தால்தான் தலைமை இல்லாத அதிமுகவுடன் கூட்டணி appeared first on Dinakaran.

Tags : Alliance ,AIADMK ,BJP ,Former minister ,Jayakumar ,Dinakaran ,
× RELATED பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்