×

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெயலலிதா ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் (கூட்டுறவுத் துறை மற்றும் வனத் துறை உட்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்கப்பட்டது. எனவே, 2022-2023ம் ஆண்டிற்கான அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று 7.11.2023 அன்று அரசு அறிவித்துள்ளது. ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்று இந்தியாவிலேயே தமிழ் நாடு கூட்டுறவுத் துறை சிறப்பான இடத்தை வகிப்பதோடு, இந்திய அளவில் பல முதல் பரிசுகளைப் பெற்றுள்ளது மற்றும் லாபத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசின் வேளாண் நலத் திட்டங்கள் அனைத்தும் கூட்டுறவுத் துறை மூலமே தமிழக விவசாயிகளைச் சென்றடைகிறது. மேலும், கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அந்தந்த வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிதியில் இருந்துதான் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நிதியில் இருந்து போனஸ் வழங்கப்படுவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக, அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகின்றன.

எனவே, உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் வழங்கியது போல், 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,general secretary ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...