×

காமன்வெல்த்: பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்... தொடரும் பதக்க வேட்டை!

கோல்டு கோஸ்ட்: 2018-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 53 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு​ தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் தொடரின் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று ஆண்களுக்கான 56 கிலோ எடைபிரிவு பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற குருராஜா, 2018 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தந்தார்.

ஸ்னாட்ச் பிரிவில் அவர் 111 கிலோ எடையும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 138 கிலோ எடையும் என மொத்தம் 249 கிலோ பளுவை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்து சாதித்தார். மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பில் மீராபாய் சானு பங்கேற்றார். பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், எதிர்பார்த்ததற்கும் மேல் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அன்ட் ஜெர்க் என இரு பிரிவாக நடத்தப்படும் இப்போட்டியில் மொத்தம் 6 வாய்ப்புகள் வழங்கப்படும். ஸ்னாட்ச் பிரிவில் முதலில் 80 கிலோ பளுவை தூக்கிய சானு, அடுத்தடுத்து 84 மற்றும் 86 கிலோவை தூக்கி முதல் இடத்தை பிடித்தார்.

கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 103, 107 கிலோ எடைகளை தூக்கிய அவர் கடைசி வாய்ப்பில் 110 கிலோ எடையையும் வெற்றிகரமாக தூக்கினர். இதன் மூலம் மொத்தம் 196 கிலோ (86 + 110) பளுவை தூக்கிய சானு இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்ததுடன், காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையையும் படைத்தார். காமன்வெல்த்தில் சானு பெறும் 2வது பதக்கம் இது. ஏற்கனவே 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் பதக்கப்பட்டியலில், 2 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Tags :
× RELATED விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்