- திருநாகேஸ்வரம் சார்த்தார் ஏரி
- திருவிடைமருதூர்
- திருநாகேஸ்வரம் சார்த்தார் குளம் காடு
- திருநாகேஸ்வரம் சார்த்தார் குளம்
திருவிடைமருதுார்: 20 ஆண்டாக பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக திருநாகேஸ்வரம் சர்த்தார் குளம் காடு மண்டி கிடக்கிறது. கால்நடைகள் குடிக்கவும் தண்ணீர் இல்லை, எனவே ஆற்று நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 23 குளங்கள் உள்ளன. இவை அரசு மற்றும் தனியார் குளங்களாக இருந்தபோதிலும் அனைத்து குளங்களும் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.இவற்றில் காரைக்கால் மெயின் சாலையில் சுமார் ஒரு ஏக்கரில் உள்ள சர்த்தார் குளம் 20 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இக்குளத்திற்கு தேப்பெருமாநல்லுார் பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும் வகையில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்திற்கு தண்ணீர் வரத்து இருந்துள்ளது. மழை மற்றும் வெள்ள காலங்களில் குளத்தில் உபரியாக காணப்படும் தண்ணீர் வடிவதற்கு வடிகால் வாய்க்கால் வசதியும் செய்யப்பட்டுள்ளது.ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்ரமிப்பின் பிடியில் பாசன வாய்க்கால் சிக்கியுள்ளதால் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், திருநாகேஸ்வரம் ராகு தலம், ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளதால் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் திருநள்ளாறு செல்லும் மெயின் சாலையில் இக்குளம் அமைந்துள்ளதால் தண்ணீர் இருந்தவரை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இருந்தது. ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் வராமல் காடு மண்டியிருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும், பொதுமக்கள் துணி துவைக்கவும் பயன்படாத நிலை உள்ளது.எனவே பேரூராட்சி நிர்வாகம் ஆக்ரமிப்புகளை அகற்றி குளத்திற்கு ஆற்று நீரை வரவழைக்க வேண்டும். இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்துள்ளது. மேலும் அனைத்து ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் கரைபுரண்டு சென்றபோதிலும் குளத்திற்கு ஒரு சொட்டுநீர் கூட வரவில்லை. மழை பெய்யும்போது குளத்திற்கு தண்ணீர் வந்தாலும் காய்ந்து கிடப்பதால் உறிந்துவிடுகிறது. இதனால் குளத்தில் நீரை பார்க்க முடியவில்லை.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்தபோது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக திருநாகேஸ்வரம் நகரத்தின் ஒட்டு மொத்த தண்ணீரும் இந்த குளத்தில் வடிய செய்தனர். அனைத்து நீரையும் இந்த குளம் உறிஞ்சி உள்வாங்கி கொண்டது. அதுபோல பாசன வாய்க்காலில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வர செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்….
The post 20 ஆண்டாக பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக காடுமண்டி கிடக்கும் திருநாகேஸ்வரம் சர்த்தார் குளம்: ஆற்று நீர் வர நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.