×

2 ஆயிரம் மாணவர்களுடன் கலைநிகழ்ச்சி ஒத்திகை

சேலம், ஆக. 12: சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் சுதந்திர தினவிழாவிற்காக, 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுடன் கலைநிகழ்ச்சி ஒத்திகை நேற்று தொடங்கியது. நாட்டின் 76வது சுதந்திர தினவிழா வரும் 15ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் திறந்த வேனில் சென்றபடி, சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் பள்ளி என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட மற்றும் ெமாழிப்போர் தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கவுரவிக்கப்படுகின்றனர். சுதந்திர தினவிழாவில் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, வனத்துறை, பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. நடப்பாண்டு, மாவட்டம் முழுவதும் உள்ள 3 அரசுப்பள்ளிகள், 2 உதவிபெறும் பள்ளிகள், 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு சிபிஎஸ்இ பள்ளி என மொத்தம் 8 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், நடப்பாண்டு சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, மணக்காடு நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, அபிநவம் ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப்பள்ளி, நெத்திமேடு ஜெயராணி மகளிர் பள்ளி, சாரதா மகளிர் பள்ளி, குளுனி மெட்ரிக் பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி, சைதன்யா பள்ளி என 8 பள்ளிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் இக்கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திறனை வெளிப்படுத்துகின்றனர்.

நாட்டுப்பற்று, தேச பக்தியை வலியுறுத்தும் பாடல்கள் இடம்பெறுகிறது. அத்துடன் நாட்டுப்புற பாடல்கள், பாரம்பரிய கலைகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில், அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த பொறுப்பு ஆசிரியர்களுடன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி செய்து வருகின்றனர். தொடர்ந்து சுதந்திர தின விழா வரை, காந்தி ஸ்டேடியத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 2 ஆயிரம் மாணவர்களுடன் கலைநிகழ்ச்சி ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Salem ,Independence Day ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்