×

தேவை 15,500 மெகாவாட் ஆக உயர்வு: பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் பெறப்படுமா?

சென்னை: தமிழக மின்தேவை 15,500 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளதால் மின்கொள்முதலை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.82 ேகாடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் மின்தேவை கடந்த ஒரு மாதத்தில் கிடு, கிடுவென உயர்ந்தது. 13,500 மெகாவாட் ஆக இருந்த தேவை தற்போது 15,500 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்வாரியத்தை பொறுத்தவரை தமிழகத்தின்  மொத்தம் 18,204 மெகாவாட் மின் திறன் உள்ளது. ஆனால், காற்றாலை, நீர்மின், சோலார் ஆகியவை சீசனில் மட்டும் சீரான மின்சாரம் கிடைக்கும். எனவே தற்போது மின்வாரியத்தால் அதிகபட்சம் 16,000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால் அக்னி வெயில் துவங்க உள்ளதால் இன்னும் ஓரிரு நாளில் தேவை 16,000 மெகாவாட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. அந்த சமயங்களில் மின்வெட்டு ஏற்படுத்துவதை தவிர வாரியத்துக்கு வேறு வழியில்லை. அதேசமயம் மின்வெட்டு அமல்படுத்தினால் அரசு மீது மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், முடிந்தவரை கோடையில் மின்வெட்டு இருக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.ஒருவேளை பற்றாக்குறை நிலவினால், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது சில நிமிடங்கள் மின்தடை செய்து தேவையை சமாளிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மின்தேவை உச்சக்கட்டமாக 15,440 மெகாவாட் ஆக இருந்தது. அன்று பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து சனி, ஞாயிறு வாரவிடுமுறை என்பதால் தேவை 14,000 மெகாவாட்டிற்கு கீழ் இருந்தது. நேற்று முன்தினம் மே தினம் விடுமுறை என்பதால் தொழிற்சாலைகள், அரசு, தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதனால் தேவை 12,500 மெகாவாட் ஆக சரிந்தது. இந்நிலையில், தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மத்திய மின்நிலையங்கில் இருந்தோ அல்லது தனியாரிடமோ கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தனியாரிடம் ஏற்கனவே தற்போது மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதியோடு 1000 மெகாவாட் மின்சாரம் குறுகியகால ஒப்பந்தத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும் என்றால் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும். அதேசமயம், கூடுதல் மின்சாரத்தை நகர்வு செய்வதற்கேற்ப மின்வழித்தடம் வசதி வாரியத்திடம் இல்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் புதிய மின்வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...