×
Saravana Stores

15 கிலோ தங்கம், 18,000 வைரம், மரகதம் குழந்தை ராமரின் கண்கவர் ஆபரணம்: 12 நாட்களில் தயாரானது

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமரின் சிலை பலரின் பாராட்டை பெற்றதைப் போல, அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க, வைர ஆபரணங்களும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இதில் பால ராமருக்கு கிரீடம், திலகம், 4 நெக்லஸ், ஒரு ஒட்டியாணம், ஒரு ஜோடி கைகாப்பு, 2 தண்டை, விஜய மாலை, 2 மோதிரம் என மொத்தம் 14 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. லக்னோவை சேர்ந்த ஹர்சஹய்மால் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் வெறும் 12 நாட்களில் இந்த ஆபரணங்களை தயாரித்து தந்துள்ளது.

இதில், 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட கிரீடம் 1.7 கிலோ எடை கொண்டது. இதில் 75 காரட் வைரங்கள், 175 காரட் ஜாம்பியன் மரகதங்கள், 262 காரட் ரூபி கற்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளன. ராமர் சூரிய வம்சத்தை சேர்ந்தவர் என்பதைக் குறிக்கும் வகையில் கிரீடத்தின் மையத்தில் சூரிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வம்சத்தின் தூய்மையை உணர்த்தும் வகையில் அது வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பால ராமரின் நெற்றியில் இடப்பட்டுள்ள நாமம் 16 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் 3 காரட் வைரங்கள் நடுப்பகுதியிலும், மற்ற இரு பகுதிகளில் 10 காரட் வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன. திலகத்தின் சிவப்பு நிறத்திற்கு உலகின் மிக உயர்ந்த மதிப்புமிக்க பர்மா ரூபி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராமரின் அறிவையும், வனவாசத்தில் இயற்கையுடனான அவரது உன்னத உறவையும் பறைசாற்றும் வகையில் 65 கிராம் கொண்ட அவரது மரகத மோதிரத்தில் 4 காரட் வைரங்கள், 33 காரட் மரகதங்கள், நடுவில் ஜாம்பியன் மரகதம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ரூபி மோதிரம் 26 கிராம் எடையுடன் வைரங்களும் ரூபி கற்களும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. கழுத்தை ஒட்டி அணிவிக்கப்பட்டுள்ள நெக்லஸ் 500 கிராம் எடையுடன் 50 காரட் வைரங்கள், 150 காரட் ரூபி கற்கள், 380 காரட் மரகதங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

5 மாலைகள் கொண்ட பாஞ்லடா நெக்லஸ் 660 கிராம் எடை கொண்டது. இதில் 80 காரட் வைரங்கள், 60 காரட் போல்கி, 550 காரட் மரகத கற்கள் இடம் பெற்றுள்ளன. விஜய மாலை 2 கிலோ எடை கொண்டது. ஒட்டியாணம் 750 கிராம் எடை கொண்ட தங்க ஆபரணம். இதில் 70 காரட் வைரங்கள், 850 காரட் ரூபி மற்றும் மரகத கற்கள் இடம் பெற்றுள்ளன. 850 கிராம் எடை கொண்ட கைகாப்பு 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. அதில் 100 காரட் வைரங்கள், 320 காரட் ரூபி, மரகதங்கள் இடம் பெற்றுள்ளன. வைரம், ரூபி கற்களுடன் தங்க தண்டை 400 கிராம் எடை கொண்டது. இவ்வாறு பால ராமருக்கு 15 கிலோ தங்க ஆபரணங்த்துடன் சுமார் 18,000 வைர, வைடூரியங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன.

The post 15 கிலோ தங்கம், 18,000 வைரம், மரகதம் குழந்தை ராமரின் கண்கவர் ஆபரணம்: 12 நாட்களில் தயாரானது appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Bala Rama ,Ayodhya Ram ,Rama ,
× RELATED உலக சாதனை படைக்க ஏற்பாடு அயோத்தி ராமர்...