×

1,385 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கியது

கிருஷ்ணகிரி, ஆக.26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1,385 பள்ளிகளில் நேற்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் 75,322 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் சூளாமலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று காலை, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கும் பணியை, கலெக்டர் சரயு, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் முன்னிலையில் துவக்கி வைத்தார். இது குறித்து கலெக்டர் சரயு கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, முதற்கட்டமாக துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தை, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முதல்வர் துவக்கி வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் சூளாமலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 6 பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 1385 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஊரக பகுதிகளில் 71 ஆயிரத்து 824 மாணவ, மாணவிகளும், நகர்புற பகுதிகளில் 3,498 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 75 ஆயிரத்து 322 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஜாகீர்உசேன், ஆர்டிஓ பாபு, சிஇஓ மகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் ரகு, பழனி, சந்தோசம், பிடிஓ பயாஸ் அகமது, துணை பிடிஓ கோவிந்தராஜ், வட்டார கல்வி அலுவலர் சுதா, ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தசாமி, பள்ளி தலைமையாசிரியர் கனிமொழி மற்றும் திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், நாகராசன், ஒன்றிய செயலாளர் அறிஞர் மற்றும் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேன்கனிக்கோட்டை: தளி ஒன்றியம், பேளகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தை, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ஓசூர் அருகே பூனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், காலை உணவு திட்டத்தை, பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ சாதனைகுறள், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, அரசு அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகர், ஊராட்சி மன்ற தலைவர் பைரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில், மேயர் சத்யா காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.

காவேரிப்பட்டணம் அருகே செட்டிமாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், காலை உணவு திட்டத்தை, காங்கிரஸ் எம்பி டாக்டர்.செல்லகுமார் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு வழங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசு, பிடிஓ.,க்கள் சுப்பிரமணியன், உமாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 1,385 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Chief Minister ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED நாவல் பழம் விலை சரிவு