×

விமானம் மூலம் சூடானிலிருந்து மேலும் 121 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: சூடானிலிருந்து மேலும் 121 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சூடான் நாட்டில் 10 நாட்களை கடந்து நீடித்து வரும் உள்நாட்டு போரில் ஒரு இந்தியர் உள்பட ஏராளமானோர் பலியாகி விட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, நேற்றும் இருதரப்பினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர். சூடானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை ‘ஆபரேஷன் காவிரி’ என்ற பெயரில் ஒன்றிய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்திய கடற்படையின் சுமேதா போர்க்கப்பல், விமானப்படையின் சி-130ஜெ ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 3 கட்ட மீட்பு பணிகளில் 998 பேர் மீட்கப்பட்டதாக வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 4ம் கட்டமாக ஒரு கர்ப்பிணி உள்பட மேலும் 121 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடிசயித்னா என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து சி130 ஜெ ராணுவ விமானம் மூலம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். “வாடிசயித்னா விமான நிலையம் மிக சிறிய ஓடுதளத்தை கொண்டது. உள்நாட்டு போர் காரணமாக அந்த விமான நிலையம் விளக்கு வௌிச்சமின்றி இருள் சூழ்ந்திருந்தது. இங்கிருந்து இந்தியர்களை மீட்பது என்பது எங்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது” என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விமானம் மூலம் சூடானிலிருந்து மேலும் 121 இந்தியர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Sudan ,New Delhi ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு