×

1,20,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் அதிகளவு வெப்பம் பதிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

ஜெனிவா: 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவு வெப்பமான மாதமாக இந்தாண்டு ஜூலை மாதம் பதிவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியின் வடக்கு அரை கோலத்தில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 1,20,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழிற்புரட்சி நிகழ்ந்த 19ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரையே வெப்ப அளவு பதிவு தொடர்பான தரவுகள் உள்ளபோதும் மரத்தின் உள் வளையங்கள், பனிப்பாறைகளின் மைய பகுதி ஆகியவற்றை கணக்கிட்டு இந்த முடிவை ஆய்வாளர்கள் எட்டியுள்ளனர்.

இம்மாதம் பதிவாகிய உலக சராசரி வெப்பமானது ஐரோப்பிய யூனியன் தரவுகளின்படி 174 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பம் பதிவான 2019 ஜூலை மாத வெப்ப அலையை விட புள்ளி 2 டிகிரி செல்ஸியஸ் அதிகமாக உள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர். தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்திற்கு முந்தைய சராசரி வெப்ப அலையை விட ஒரு புள்ளி 5 டிகிரி செல்ஸியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும், இம்மாதம் மட்டும் 16 நாட்கள் இந்த அளவை தாண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பாரீஸ் காலநிலை ஒப்பந்தப்படி 20 அல்லது 30ம் ஆண்டின் உலக சராசரி வெப்ப அளவை ஒரு புள்ளி 5 டிகிரி செல்ஸியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல் நினோன் சுழற்சியில் கடந்த மாதம் பூமி அடியெடுத்து வைத்துள்ளதால் கிழக்கு பசுபிக் கடலில் வெப்பநிலை உயர்ந்து உலகம் முழுவதும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும். இந்த நிலையில் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு பயன்பாடு மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்து பூமி வெப்பமயமாதல் இருமடங்கு வேகத்தில் நிகழும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புவி வெப்பமடைதல் புதிய உச்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது.

இதே நிலை தொடரும் பட்சத்தில் இதுவரை வெப்ப அலை கணக்கிடப்பட்டதிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டு மாறும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜூலை மாதம் வெப்ப அளவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ், உலக வெப்பமயமாதல் காலகட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மாறாக உலகம் உருகும் காலம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

The post 1,20,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் அதிகளவு வெப்பம் பதிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Geneva ,Dinakaran ,
× RELATED ஜெனீவா ஓபன் டென்னிஸ் கேஸ்பர் சாம்பியன்