×

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். விதிகளை மீறி பயிர் கடன்கள் வழங்கப்பட்டதாக கூறி, பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக விலக்கி கொள்ள வேண்டும். பயிர் கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பு இல்லாமல், அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு, நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

தவணை தவறிய நகைக்கடன்கள் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ள இழப்பு தொகைக்கு சங்க செயலாளர் மற்றும் பணியாளர்களை பொறுப்பாக்கி ஓய்வு கால நிதிப்பயனை நிறுத்தி வைக்கும் தவறான நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு, இழப்பு தொகையை நட்டக்கணக்கிற்கு எடுத்து செல்ல உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தணிக்கை துறையை முன்பிருந்தவாறு கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அதிகாரிகள் பேரில் தேவையற்ற இனங்களில் பல லட்சங்கள் முதலீடு செய்வது தவிர்க்க வேண்டும்.

சொந்த மாவட்டங்களில் பணியாற்ற ஏதுவாக இடம் மாறுதல் செய்யும் அதிகாரம் பதிவாளர், கூடுதல் பதிவாளருக்கு வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஊதிய விகிதம் மாற்றி அமைக்கும் வகையில் ஊதியக் குழு அமைத்து, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் வழங்குவது போல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

The post 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Initiative Cooperative Bank ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...