நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் நாமக்கல் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 3 மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு வரும் 1ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 4ம் தேதியும் தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 தேர்வினை 197 பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆயித்து 411 மாணவ-மாணவியரும், பிளஸ்2 தேர்வினை 197 பள்ளிகளைச் சேர்ந்த 18 ஆயிரத்து 455 மாணவ-மாணவியரும் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 85 அரசு பொதுத்தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு பணியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என 1500 பேர் ஈடுபடுகிறார்கள். தேர்வினை நடத்த முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி மேற்பார்வையில் நடந்து வருகிறது.
தேர்வு ஒருங்கிணைப்பு பணியில் மூத்த தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்விற்கான விடைத்தாள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. விடைத்தாளுடன் முகப்பு பக்கங்கள்(தேர்வர்களின் பெயர், தேர்வு எண் விபரங்கள் அடங்கியது) தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பிளஸ்1, பிளஸ்2 மாணவ-மாணவியருக்கு செய்முறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது.
தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஆலோசனை கூட்டம் நடத்தி நேற்று முன்தினம் அறிவுரை வழங்கினார். இந்நிலையில் பிளஸ்1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் நேற்றுமுன்தினம் மாலை, சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது.
அதைத்தொடர்ந்து வினாத்தாள் அடங்கிய பண்டல்கள், பாடவாரியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகம், திருச்செங்கோடு, ராசிபுரம் என 3 இடங்களில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களுக்கு பொறுப்பாளர்களாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மூத்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபயிற்சி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வளாகத்தில் வெளி நபர்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post 11, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.