×

10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு இன்று ரிசல்ட்: இணையதளங்களில் பார்க்கலாம்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று வெளியிடுகிறது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், பிளஸ் 1 முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 5ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வில் தமிழ்நாட்டில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்களும், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவியரும், மாற்றுப் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பங்கேற்றனர். புதுச்சேரியில் இயங்கி வரும் பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 799 மாணவர்களும், 7 ஆயிரத்து 577 மாணவியர் என 14 ஆயிரத்து 376 பேர் தேர்வில் பங்கேற்றனர். இவர்கள் தவிர 5 ஆயிரத்து 338 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

பத்தாம் வகுப்பு: அதேபோல, தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 20ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த 12352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவியர் தேர்வு எழுதினர். புதுச்சேரியை சேர்ந்த 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7655 மாணவியர் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 37 ஆயிரத்து 798 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில், மேற்கண்ட இரண்டு தேர்வு முடிவுகளும், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவு காலை 10 மணிக்கும், பிளஸ் 1 தேர்வு முடிவு மதியம் 2 மணிக்கும் வெளியாகும். தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய தளங்களிலும் வெளியிடப்படுகிறது. இந்த இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் இந்த இணைய தளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தேர்வின் போது கொடுத்த செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர எஸ்எம்எஸ் மூலமும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்வு துறை அறிவித்துள்ளது.

The post 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு இன்று ரிசல்ட்: இணையதளங்களில் பார்க்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை