×

100 நாள் வேலை திட்டத்தில் முருங்கை, பனை மரங்களை நடக்கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்த மரங்களை நடவேண்டும், எந்த மரங்களை நடக்கூடாது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக 2006ம் ஆண்டில் ஒன்றிய அரசால் நூறு நாள் வேலை வழங்கும் திட்டமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ குணங்களை அதிகம் கொண்ட முருங்கை மற்றும் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படும் பனை மரங்களை நடக்கோரி 2021ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு மனு அளித்தேன். கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நடும்படி தமிழக  அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த மரத்தை நட வேண்டும், எந்த மரத்தை நடக்கூடாது என்று நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதுபோன்ற கோரிக்கைகளில் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற பொதுநல மனுக்களை தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….

The post 100 நாள் வேலை திட்டத்தில் முருங்கை, பனை மரங்களை நடக்கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை