திருமயம், மார்ச் 31: திருமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்கு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடையே கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் இந்தியாவின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவித்து பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து நேற்றுடன் வேட்பு மனு திரும்பப்பெறுவது முடிவடைந்த நிலையில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பொதுமக்களும் தங்களது வாக்குகளை செலுத்த தேர்தல் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே தேர்தல் ஆணையம் அனைத்து மக்களும் வாக்கு செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் வாக்கு செலுத்த தபால் ஓட்டு முறையை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுத்தி அனைவரும் வாக்கு செலுத்த ஏதுவாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி பகுதியில் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் மெர்சி ரம்யா முதல் கையெழுத்தினை போட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வாக்கு செலுத்துவது தனிமனிதர் ஒவ்வொருத்தரின் உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில் கையெழுத்தினை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் திருமயம் வட்டாட்சியர் புவியரசன்புவியரசன் பொன்னமராவதி வட்டாட்சியர், பொன்னமராவதி, திருமயம் துணை வட்டாட்சியர்கள், வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.
The post 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.